தனித்தன்மையை இழந்த வெளியுறவுத்துறை
கடந்த காலங்களில் விடுதலை அடைந்த காலம் தொட்டு இந்திய அரசியல் நடுநிலை பேணிய வெளியுறவுக் கொள்கை கொண்டு விளங்கி வருகிறது. காந்தியின் தேசமாக அணிசேரா கொள்கையின் உயர் தனி பீடமாக இந்தியா விளங்கி வந்தது. அமெரிக்கா, சோவியத் யூனியன் என இரண்டு வல்லரசுகள் பின்னால் உலகம் இரு கூறுகளாகப் பிரிந்து கிடந்தது. பொதுவுடைமை நாடுகள் முதலாளித்துவ நாடுகள் என பிரிந்துக் கிடந்த சூழலில் இந்தியா மட்டும் அணிசேரா நாடுகள் என நாடுகளை திரட்டி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போர் முரசு கொட்டியது.
பாண்டுங் மாநாட்டில் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்ற அணிசேரா மாநாட்டில் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ உள்ளிட்ட தலைவர்கள் வல்லரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினர். மூன்றாம் நாடுகள் என அழைக்கப்படும் வளரும் நாடுகள் குறித்த பிரச்சனைகளில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் பெற்றது.
பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதுகுறித்த பேராதரவு தெரிவித்த முதன்மை நாடாக இந்தியா விளங்கியது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட போது இந்தியா வந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அரபாத், என் சகோதரியின் மகனை இழந்தேன் என உருக்கத்துடன் குறிப்பிட்டதை இந்த நாடு மறக்கவில்லை.
ஆனால், பின்னர் அரியணை ஏறிய நரசிம்மராவ், இந்தியாவின் மாண்புகளை மண்மூடி புதைத்தார். இஸ்ரேலுடன் குலாவினார். மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில் வேறுபாடு காட்ட ஆரம்பித்தார். பின்னர் வந்த அரசுகள் தொடர்ந்து நிலைக்கவில்லை. வாஜ்பாய் அரசு மட்டுமே ஐந்தாண்டுகள் நீடித்தது.
நரசிம்மராவ் அரசின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாஜ்பாய் அரசின் வெளியுறவுக் கொள்கையும் அமைந்தது. ராவ் அரசின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குரியதாக இருந்தது. ஆனால் நேரு குடும்பம் காங்கிரசை மீண்டும் தனதாக்கிக் கொண்ட நிலையிலும் கூட தங்களது குடும்பப் பெருமை குறித்தோ நாட்டின் மாண்பு குறித்தோ கவலை கொள்ளாது அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை அப்பட்டமாக எடுத்தது.
எகிப்து, துனிசியா, ஜோர்டான், ஏமன், நைஜீரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் புரட்சிகள் குறித்தும் மவுனம் சாதித்த இந்தியா, தனது நிலையை பகிரங்கமாக அறிவிக்காமல் தடுத்தது எது?
உலகமே பற்றிக் கொள்ளும் வகையில் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்கள் புரட்சிகள் குறித்தும் இந்திய வெளியுறவுத்துறை எத்தகைய கருத்தையோ நிலைப்பாட்டையோ எடுக்காமல் மவுனம் சாதிப்பது வர்லாற்றுத் தவறாகவே கருதப்படும். இந்தியா தனது தனித்தன்மை கொண்ட வெளியுறவுக் கொள்கையை மீட்டு அணிசேரா நாடுகளின் தத்துவம் மீண்டும் சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்க ஆவன செய்ய வேண்டும்

No comments:
Post a Comment