Tuesday, June 2, 2009


அசத்தும் அசதுத்தீன் உவைசி!
-சர்ஜுன்
ஹைதராபாத் மக்களவைத் தொகுதியை மீண்டும் ஒரு முறை கைப்பற்றியுள்ளது மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி. இக்கட்சியின் தலை வரான அசதுத்தீன் உவைசி வெற்றி பெற்றார். ஹைதராபாத்மக்களவைத் தொகுதியை மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி கைப்பற்றியிருப்பது எட்டாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது. அசதுத்தீன் உவைசி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆறுதடவை அசதுத்தீனின் தந்தை சலாஹுதீன் உவைசி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 மக்களவைத் தேர்தலில் உவைசி தன்னை எதிர்த்துக் போட்டியிட்ட தெலுங்கு தேச வேட்பாளர் ஜாகித் அலிகானை தோற்கடித்தார். இவர் சியாசத் என்ற உர்து செய்தி ஏட்டின் ஆசிரியராவார். தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் போட்டியிட்டார். இவரை அசதுத்தீன் உவைசி ஒருலட்சத்து 13 ஆயிரத்து 865 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 50லிருந்து 70 சதவீதம் வரை முஸ்லிம் வாக்காளர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த காலத்தில் இந்த தொகுதியில் பாரதீய ஜனதா போட்டியிட்டது. பாஜக வின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடுவை 1996ல் அசதுத்தீன் தோற்கடித்திருக்கிறார்.
தற்போதைய மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் அசதுத்தீன் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து சட்டமன்ற தொகுதி களைக் கைப்பற்றிவந்த மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தற்போது ஏழு சட்டமன்ற தொகுதிகளை கைப் பற்றியுள்ளது.
அசதுத்தீனின் தம்பியான அக்பருத்தீன் உவைசி சந்திராயன் குட்டா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு அக்பருத்தீன் மூன்றாவது முறை யாக வெற்றி பெற்றிருக்கிறார்.
கட்சியின் செல்வாக்கு மிகுந்த சார் மினார் தொகுதியையும் தக்க வைத்துக் கொண்டது. யாகுத், புரா மற்றும் கர்வான் சட்டமன்ற தொகுதிகள் புதிதாக உருவாக்கப் பட்ட பஹதூர்புரா மற்றும் நம்பள்ள தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
10 சதவீதம் முஸ்லிம்கள் உள்ள ஆந்திரப்பிரதேசத்தில் 294 சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் பதினொரு பேரே முஸ்லிம்களாவார். இதில் ஏழு பேர் மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியிலிருந்தும், மூவர் காங்கிரஸிலிருந்தும் ஒருவர் தெலுங்கு தேசத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸின் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள், முஹம்மது அலி ஷப்பீரும், முஹம்மது பரீத்தீனும் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஒன்றாக குறைந்தது. அசதுத்தீன் மட்டுமே ஒரே முஸ்லிம் மக்களவை உறுப்பினர்



நாடாளுமன்றத்தில் தேவ்பந்த் அறிஞர்கள்
-சர்ஜுன்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மவ்லவி ஹிஃப்சுர் ரஹ்மான் மற்றும் மவ்லானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மார்க்க அறிஞர்கள் அரும்பாடு பட்டார்கள். பின்னர் அவர்களது தியாகத்திற்கு பரிசாக சட்டமன்ற உறுப்பினர் பதவியும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் அவர்களைத் தேடிவந்தன. மத்திய அமைச்சரானார் ஆசாத் அது ஆயிற்று அறுபதாண்டு காலம். மார்க்க அறிஞர்கள் அரசியலில் சிறப்பிடம் பெறுவது என்பது இனி நடக்கவே நடக்காதோ என ஏங்கி தவித்த நிலையில் புகழ்பெற்ற தேவ் பந்த் மார்க்க கல்வி சாலையிலிருந்து உருவான இரண்டு மார்க்க அறிஞர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.
அஸ்ஸாமில் மவ்லவி பத்ருதீன் அஜ்மலில் வெற்றி பெற்றார். மவ்லவி அஸ்ராருல் ஹக் காசிமி பிகார் மாநிலம் கிஸன் கஞ்ச் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார். மவ்லவி பத்ருதீன் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் அன்வர் ஹுஸைனை வென்றார். மவ்லவி அஸ்ரருல் ஹக் காசிமி லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய தலை வரான முன்னாள் மத்திய அமைச்சர் முஹம்மது தஸ்லீமுதீனை தோற்கடித்தார்.
81 ஆயிரம் வோட்டு வித்தியாசத்தில் வென்ற அஸ்ராருல் ஹக் காசிமி டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் அகில இந்திய தலிமி வ மில்லி பவுண் டேஷனின் நிறுவனத் தலைவராவார். கிசன் கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த காசிமி தனது பகுதி குறித்து மிகுந்து கவலை கொண்டவராக விளங்கினார். கடந்த ஏழு ஆண் டுக்கு முன்பு மில்லி பெண்கள் பள்ளி கூடத்தை நிறுவினார். தனது வெற்றி கிசன் கஞ்ச் தொகுதி மக்களின் வெற்றி என்றார் மவ்லவி அஸ்ராருல் ஹக். மவ்லவி பத்ருதீன் அஜ்மல் அவர்களோ இந்திய அரசியலில் சில வருடங்களாக ஒளி வீசும் அரசியல் தலைவராக விளங்கி வருகிறார். தேவ் பந்த் மார்க்க அறிஞர்கள் மக்களவையில் தூள் கிளப்ப போகிறார்கள்



வாக்குரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள்!
-அபூசாலிஹ்
இரும்பு மங்கை என்றும் தலித் மக்களின் பெருந் தலைவி என்றும் மாயாவதி அகில இந்திய அளவிலும் புகழப்பட்டாலும் தலித் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
விடுதலை பெற்ற 60 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை மறுக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது.
தலித் மக்களின் உரிமைகள் பறிக்கும் விவகாரங்கள் குறித்து தலித் உரிமை காக்கும் அமைப்பு 500 முறையீடுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
1)2009 மக்களவைத் தேர்தலில் ஏழை தலித் வாக்களிக்கச் சென்ற போது தடுத்து நிறுத்தியதாக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த புள்ளிகள்.
2) அரசியல்வாதிகள்
3) அரசியல் (கு) தொண்டர்கள்
4) தேர்தல் பணியாளர்கள்
5) காவல்துறை அதிகாரிகள்
தலித் மக்களின் உரிமைகளை ஆதிக்க சாதிவெறியினர் மறுத்ததில் முதலிடம் வகுத்ததை அந்த உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தலித் மக்களின் வாக்குரிமை மறுக்கும் விஷயத்தில் முதலிடத்தில் ஆந்திராவும், இரண்டாவது இடத்தில் மாயவதி ஆளும் உத்தரப் பிரதேசத்திலும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தானும், நான்காவது இடத்தில் பீகாரும், ஐந்தாவது இடத்தில் மகராஷ்ட்ராவும் உரிமை பறிப்பு விஷயத்தில் முன்னிலை வகிக்கின்றன.
உரிமை மறுக்கப்படுவது தேசத்தின் உச்சகட்ட வன்முறை என தேசிய தலித் கண்காணிப்பகம் வேதனை தெரிவித்துள்ளது.
தலித் மக்களின் உரிமை மறுக்கப் பட்ட விவகாரத்தில் 28 சதவீத சம்பவங்கள் ஆதிக்க சாதியினரால் தலித் மக்கள் ஓட்டுப் போடாவிடாமல் விரட்டப் பட்டனர்.
தேர்தல் நாளன்று தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிகளைக் குறி வைத்து ஆதிக்க சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை சீர்குலைக்கும் செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தலித் வாக்காளர்களின் உரிமைகளை மறுப்பதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு இருப்பதாக தேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் பி.எஸ் கிருஷ்ணன் தெரிவிக்கிறார். 2 சதவீதத்தினர் கிராம பஞ்சாயத்துகளில் தலித் வாக்களர்களின் உரிமையை மறுக்கின்றனர்.
13 சதவீதம் தலித் வாக்குரிமை முறையீடுகள் அரசு இயந்திரம் தலித்களுக்கு எதிராக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றன.
11 சதவீத வழக்குகள் தேர்தல் அதிகாரிகள்தலித் வாக் காளர்கள் வாக்களிப்பதற்கு தடையாக இருப்பதாக குறிப்பிடுகின்றன. 10 சதவீத வழக்குகள் ஆதிக்க சாதியினர் தலித்களுக்கு பதிலாக கள்ள ஓட்டு போடும் கொடுமைகளைக் குறித்து நொந்து கொள்கிறது.
மூன்று சதவீத தலித் மக்களின் வாக்குரிமை காவல் துறையினர் நிகழ்ந்த்தும் அடக்குமுறைகளால் பறிக்கப் படுகிறது.
மீதம் உள்ள தலித் வாக்காளர்கள் பணம் மற்றும் மதுவிற்கு விலை போகும் அவலம் நீடிப்பதாக தேசிய தலித் ஆணையம் குறிப்பிடுகிறது.
தலித்களின் துயரம் வாக்குப்பதிவு நாளோடு முற்றுப்பெறுவதில்லை. அதன் பிறகு தான் கிளைமாக்ஸ்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அக்கிரமத்தின் உச்சகட்டம் நிகழ்த்தப்படுகிறது.
இந்த அநீதியை எதிர்த்து தேசிய தலித் கண்காணிப்பகம் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், மூன்று தலைமை தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்ட போதும் பலன் ஒன்றும் விளையவில்லை என தங்களது உள்ளக் கொதிப்பை வெளியிட்டுள்ளனர்.
சட்டம் தலித்களின் விஷயத்தில் செயல்படவேயில்லை. தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தல் நடைபெற உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தலித் மக்களின் வாக்கு மறுப்பு தொடர்பாக தொடுக்கப்பட்ட அனைத்து முறையீடுகளின் மீதும் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய தலித் தேர்தல் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
செல்வி மாயாவதி தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்படலாம். ஆனால் இந்தியாவில் எண்ணற்ற கிராமங்களில் தலித் மக்களின் வாக்குரிமை மறுக்கப்படுகின்றன. சேரிகளில் வெளிச்சக் கீற்று தென்படுவது எப்போது