
அணு ஆயுதம் பூமிப்பந்துக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல். இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்கு காரணமாக அமைந்ததே நாசகார அணு ஆயுதங்களே என்பதை உலகம் உணர்ந்து கொண்டது.
ஹிரோஷிமா, நாகசாகியில் 1945&ம் ஆண்டு அமெரிக்காவால், அணுகுண்டு பேரபாயம் ஏற்பட்ட போது, அணுகுண்டு என்ற அழிவுசக்தி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த அபாயம் அழிக்கப்படாமல் தொடருமானால் உலகம் நிம்மதியாக வாழவே முடியாது. உலக அழிவின் தொடக்கம் என்பது அணு ஆயுதப் பேரழிவில் தான் இருக்கிறது என காந்தியடிகள் அன்றே எச்சரித்தார். ஆனால் அணு ஆயுதப் பேரபாயத்தை உலகம் உணரவேயில்லை.
உலகின் வளர்ந்த நாடுகள் என்பவையெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அணுஆயுதங் களை உற்பத்தி செய்து குவித்து வைத்துள்ளன.
தற்போது உலகில் இருக்கும் அணு ஆயுதங்களில் ஏறத்தாழ 23 ஆயிரம் அணு ஆயுதங்களில், 22 ஆயிரம் அணு ஆயுதங்கள், கிட்டத்தட்ட 95 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் தான் இருக்கின்றன.
ரஷ்யாவிடம் 12 ஆயிரம் அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 9 ஆயிரத்து 400 அணு ஆயுதங்களும், பிரான்ஸிடம் 300 அணு ஆயுதங்களும், சீனாவிடம் 240 அணு ஆயுதங்களும், பிரிட்டனிடம் 185 அணு ஆயுதங்களும் உள்ளன.
உலகில் இந்த ஐந்து நாடுகளும் அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளாக கருதப்படுகின்றன.
ஆனால் இந்த ஐந்து நாடுகளைத் தவிர பல நாடுகள் இன்று அணு ஆற்றல் பெற்ற நாடுகளாக திகழ்கின்றன.
அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக 47 நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு வர வழைத்து, அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை அமெரிக்க அதிபர் ஒபாமா கூட்டியிருப்பது மேற்கத்திய நாடுகளால் வெகுவாக பாராட்டப்படுகிறது.
இத்தனை நாடுகள் ஒன்று கூடி மாநாடு நடத்துவது இது இரண்டாவது முறையாகும். 1945&ல் அன்றைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் இதைப்போன்ற ஒரு மாநாட்டைக் கூட்டினார். அதன் பலனாக ஐக்கிய நாடுகள் சபை அன்று உருவானது.
2007&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஒரு திடீர் நிகழ்வு உலக நாடுகளின் தலைவர்களை திடுக்கிடச்செய்தது.
தென்னாப்பிரிக்காவில் ஆறு அணு குண்டுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த யுரேனியத்தை கைப்பற்ற சில பயங்கரவாதிகள் அதிநவீன பாதுகாப்பு வளையத்தை உடைத் தெறிந்து நுழைய முற்பட்டபோது உலகம் வெலவெலத்துப் போனது.
அணு ஆயுதத்துக்கு தேவைப் படும் மூலப் பொருட்கள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கினால் என்னவாகும் என்ற அச்சம் உலகை ஆட் கொண்டது.
இதுவே இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சமாக மாறியது.
ஈரான் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை. இஸ்ரேல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வில்லை. இஸ்ரேலுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் என்ற போர்வாளுடன் துருக்கிப்பிரதமர் ரஜப் தய்யிப் எர்தோகன் அங்கே காத்துக் கொண்டிருந்தார்.
உலக அமைதி, சமாதானம் போன்றவை குறித்து உரத்து முழங்கும் பிரிட்டனும், பிரான்ஸும் அணு ஆயுதக் குறைப்புக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தங்களது பாதுகாப்பு கருதியே அணு ஆயுத குறைப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை என தெரி வித்திருக்கின்றன.
அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க முனையும் உன்னத நோக்கம் இந்த நிகழ்வின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் உண்மையான நோக்கம் அதுதானா?
அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தலைமையில் கூடிய 47 நாடுகளின் தலைவர்களின் லட்சியம்! காலம் கடந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும், ஜப்பானும் வீழ்த் தப்பட்ட பிறகு உலகின் அணு ஆற்றல் பெற்ற நாடுகளாக ஐந்து நாடுகளே இருந்தன.
1960களில் பிரிட்டன், இஸ் ரேலுக்கு அணு ஆற்றல் ரகசியத்தை ரகசியமாக அள்ளி வழங்கியது.
எழுபதுகளின் மத்தியப்பகுகளில் திருமதி இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியது.
அதே காலகட்டத்தில் ஈராக்கும் அணு ஆயுதத் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியது. ஈராக்கின் அணு ஆற்றல் மையத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்தது.
இதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் சதாம் ஹுசே னின் தலைமையிலான ஈராக் அணு ஆற்றல் மேம்பாட்டை பெற முயன்று கொண்டே வந்தது.
2003 மார்ச் 20 ஆம் தேதி சதாம் ஹுசேன் வீழ்த்தப்பட்டதோடு ஈராக்கின் அணு ஆற்றல் கனவு தகர்ந்தது.
90&களில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் அணு ஆயுத ஆற்றல் மேம்பாடு தொடங்கியது.
இதே காலகட்டத்தில் தாலிபான்களின் எழுச்சியும், சோவியத் யூனியன் என்ற ஒன்றுபட்ட நாடுகளின் கூட்டமைப்பின் வீழ்ச்சியும் மேற்குலகை அணு ஆயுத விவகாரத்தை தீவிரமாக கையிலெடுக்க வைத்தன.
2000&த்தின் துவக்கத்தில் வடகொரியா அணு ஆயுத வளர்ச்சியை முழுமையாக பெறத் தொடங்கியது. சிரியாவும், லிபியாவும், அல்ஜீரியாவும் அணு ஆயுத முயற்சியில் வெகுதூரம் முன்னேறிச் சென்று விட்டன என 2000 ஆண்டு தொடக்கத்தில் செய்திகள் உலாவரத் தொடங்கின.
எகிப்து அணு ஆற்றலை மின்சாரத் தேவைக்கு பயன்படுத்தப் போவதாகக் கூறி அமெரிக்க ஆதரவுடன் தனது முயற்சிகளைத் தொடங்கியது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மின்சாரத் தேவைக்கு அணு ஆற்றலை பயன்படுத்த பிரான்ஸ் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அணு ஆயுதங்களை தயாரிப்பது கடந்த நூற்றாண்டுகளைப் போல கடினமான ஒன்றல்ல என்பதே தொழில்நுட்ப அறிஞர்களின் கருத்தாக உள்ளது.
இன்று உலகின் பொருளாதார செழுமை மிகுந்த நாடுகளாகக் கருதப்படும் ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, குவைத், மலேஷியா, தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் திட்டமிட்டாலும் கூட, ஏன் ஆசைப்பட்டால் கூட மிக எளிதில் அணு ஆற்றல் நாடாக விரைவிலேயே மாற முடியும் என்ற சாத்தியங்களை மறுக்க முடியாது.
கேபிடலிஸம் என்ற முதலாளித்துவமோ, கம்யூனிசம் என்ற பொதுவுடமை தத்துவமோ இன்று உலகை ஆட்சி செய்யவில்லை.
கன்ஸ்யூமரிசம் என்ற நுகர்வோர் கலாச்சாரமே இன்று உலகை ஆட்சி செய்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.
நாளைய வல்லரசுகளாக மனிதவளம் கொண்ட இந்தியா மற்றும் சீனாவை அரசியல் வல்லுனர்கள் இன்று அடையாளம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் இன்றைய பூமிப்பந்தின் ஒற்றை வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூட பீஜிங்கைப் பார், பெங்களூருவைப் பார் என முழங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
நிலைமை இவ்வாறு இருக்க அணுஆயுத அபாயத்தை ஒழித்துக்கட்டியே தீர வேண்டும் எனக் கூடிய நாடுகளின் கூட்டத்தில், இறுதி லட்சியத்திற்கு முன்பாக ஒரு இடைக்கால லட்சியத்தை விநோதமாக அறிவித்தார்கள்.
இப்போது அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளும் அணு ஆயுதங்கள் தயாரிக்காமல் பார்த்துக் கொள்வது (?) என்பதே அந்த இடைக்கால லட்சியமாகும்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா என்ற இந்த ஐந்து நாடுகளைத் தவிர மற்றவை என்.பி.டி. (அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என இந்த ஐந்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இது, இதர நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எது எப்படியோ அணு ஆயுத அபாயம் என்ற பூச்சாண்டியைக் காட்டி ஈரானுக்கு எதிராகப் போர் தொடுப்பதற்காகவே இந்த மாநாடு நடத்தப்பட்டதாக ராஜதந்திர தகவல்கள் கூறுகின்றன.
அணு ஆயுத அபாயம் என்ற அச்சுறுத்தும் காரணத்தைக் கூறி அமெரிக்கா கூட்டிய மாநாடு எதிர்பார்த்த வெற்றியை வழங்குவதற்கு பதிலாக, எதிர்பாராத விளைவை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் இந்த மாநாடு ஏகாதிபத்தியத்திற்கு ஏமாற்றத்தையும், ஈரானுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கைக்கு போதுமான ஆதரவு கிட்டவில்லை.
ஈரானின் தீவிர ஆதரவு நாடான சீனா, ஈரான் மீதான மற்றொரு பொருளாதாரத் தடைக்கு தனது ஆதரவு கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
பிரேசிலும், ஈரான் ஆதரவில் தீவிரமாக உள்ளது. ஈரான் ஆக்க வேலைகளுக்கு மட்டுமே அணு ஆற்றலை பயன்படுத்துகிறது அதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும் என ரஷ்யாவும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஈரானின் அணு ஆற்றல் வளைகுடாப் பிராந்தியத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என தொடர்ந்து பரப்புரை செய்து வரும் இஸ்ரேலின் பிரதமர் புன்யாமீன் நேதன்யாஹு தனது பயணத்தையே ரத்து செய்து விட்டார். அமெரிக்காவின் உற்ற தோழனான இஸ்ரேல் மாநாட்டுக்கு ஆஜராகாமல் இருந்தது அமெரிக்காவுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
அணு ஆற்றல் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்ட துருக்கி பிரதமருக்கு, அஞ்சியே இஸ்ரேலியப் பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் சமீப கால நெருங்கிய நண்பனான இந்தியாவும், நெடுங்கால நெருங்கிய நண்பனான சவூதி அரேபியாவும், ஈரானுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைக்கு தெரிவித்திருக்கும் எதிர்ப்பு அரசியல் அரங்கில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
மொத்தத்தில் ஒபாமாவால் சமீபத்தில் நடத்தப்பட்ட மாநாடு, ஈரானின் ஆதரவு மாநாடாக மாறிவிட்ட விநோதம் நடந்துள்ளது
